Saturday 1 October, 2011

எரித(ழ)ல் அணை(த்)தல்




என்னைப் பற்ற வைப்பது எளிது.
தீக்குச்சியோ, எரிமலையோ தேவையில்லை.
சின்ன நாணல் கொடியும், கொஞ்சம் கானல் நதியும் போதும்.

இப்போதும் எரிந்துகொண்டுதானிருக்கிறேன்...
விடிந்ததுகூடத் தெரியாமல் திருதிருவென முழிக்கும் தெருவிளக்காக.
ஆலமரங்கள் அடியோடு சரியும் சூறைக்காற்றில்கூட
அணையத் தெரியாத சிற்றகலாக.

பெரியதொரு மழைவந்தால், சின்னஞ்சிறு முக்தி சாத்தியமென்று -
மண்டியிட்டேன்... மன்றாடவும் செய்தேன்.
வலியுணர்ந்து வந்த மழை, பூமியின் மொழி புரியாமல்
வானத்துக்கே திரும்பியபோது
என் உள்ளத்தில் தைத்தன உன் வார்த்தைகள்.

ஒரு மௌனம் வெடித்ததுபோல் துடிக்கப் பழகியது இதயம்.
இடிகளை இனி இப்படியும் இடிக்கலாமென்ற திட்டத்தில் உறைந்தன முகில்கள்.
விண்மீன்களின் கல்லறைகளாகி மீண்டுமொருமுறை
மின்னிமறைந்தன நினைவில் உந்தன் விழிகள்.
கட்டங்கட்டத் தெரியாமல் வட்டமிடும் பறவைபோல்
சுற்றிவரத் துவங்கின உன் பார்வைகள்.

கனவுகளை மென்றுதின்று, கண்ணீர்த்துளிகளை குடித்தும்
அணையத் தெரியவில்லை எனக்கு.
யாரோ வந்து பற்றவைத்தார்கள்... யாரோ வந்து அணைப்பார்கள் ... என்றிருப்பது நிம்மதி.
யார்வந்து பற்றவைக்க வேண்டும்... யார் அணைக்க வேண்டுமென்று
விளக்குகள் எதிர்பார்ப்பது வேதனை.

உன் கரிய கூந்தல் கருப்பு நெருப்பாக எரிவது ஒரு இரவு என்றால் -
எப்படி அணைப்பதென்று எனக்கு நீதான் சொல்லித்தரவேண்டும்...
என்னையும், இரவையும்...!