Wednesday 4 May, 2011

நாளைய ஆகாயம் நமக்காக...



குறைகிற நிலா மறுபடி வளரும்.
மறைகிற சூரியன் மறுநாள் உதிக்கும்.
விழுகிற விதை செடியாய் முளைக்கும்.
அழுகிற மழை புல்லாய் சிரிக்கும்.

உடைகிற மலை சிலையென ஆகும்.
சிதைகிற அணு சக்தியை வீசும்.
ஒடிகிற மூங்கில் குழலாய் மாறும்.
முடிகிற நாள் மறுபடி விடியும்.

தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல.
இடர்கள் எல்லாம் இறுதிகள் அல்ல.
வழியில் வருகிற பள்ளம் தாண்டு.
விழியில் வழிகிற கண்ணீர் தாங்கு.

தொடரும் கனவுகளை துரத்திப்பிடி.
வசப்படும் பொழுதுகளை வசீகரப்படுத்து.
வளரும் நினைவுகளை வரிசைப்படுத்து.

நம்பிக்கை வீணையை நாள்தோறும் வாசி.
நேற்றை மற; இன்றை நினை.
நாளைய ஆகாயம் நமக்காக விரியும்.




8 comments:

Lali said...

//அழுகிற மழை புல்லாய் சிரிக்கும்//


தன்னம்பிக்கை வளர்க்கும் வரிகள் ஒவ்வொன்றும்.. மழையை பற்றிய அருமையான வரி.. வாழ்த்துக்கள் நட்பு! :)
http://karadipommai.blogspot.com/

சாகம்பரி said...

//நேற்றை மற; இன்றை நினை.
நாளைய ஆகாயம் நமக்காக விரியும்.//
இன்றைய வாழ்க்கையை சரிவர வாழ்ந்தால் விடிகின்ற பொழுது நம்முடையது. கருத்துமிக்க கவிதை.

Yaathoramani.blogspot.com said...

இன்றைய இளைஞர்களுக்கான
நவீன ஆத்திச்சூடி என சொல்லும் அளவு
மிகச் சரியாக
சொல்லவேண்டியதை
சொல்லவேண்டிய விதத்தில்
சொல்லிப்போகும் உங்கள் படைப்பு அருமை
தொடர வாழ்த்துக்கள்

சிசு said...

@ Lali

வருகைக்கும், நட்பு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Lali.

சிசு said...

@ சாகம்பரி

கருத்துரைக்கு மிக்க நன்றி அக்கா...

சிசு said...

@ Ramani

உங்கள் வாழ்த்தில் நெகிழ்ந்து நிற்கிறேன் ரமணி...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

ஹேமா said...

நம்பிக்கை,துணிவு தரும் வார்த்தைகள் !

Unknown said...

அருமை நண்பா ஒரு ஒரு வரிகளும்
நற்சிந்தனை
ஊக்கம் அளிக்கும் வார்த்தைகள்
நன்றி