Saturday 9 April, 2011

வறுமைப்பூக்கள்



உலகம் பூபாளமாய்
விடியும்போது
வறுமைப்பூக்கள் மட்டும்
முகாரி பாடுகின்றன.

அன்புச்சட்டம் முதல்
அதிகாரச்சட்டம் வரை
அமல்படுத்துவதெல்லாம்
ஆதிக்கவர்க்கமாகிப் போனதில்
உரிமை கேட்டுப் போன வறுமைப்பூக்கள்
ஊமையாகிப் போயின.


தொழிற்சாலை நகரங்களில் - இன்னும்
இதழ்களில் பால்மணம் மாறா குழந்தைகள்
போராடுகின்றன இயந்திரங்களோடு.
அவர்களின் கண்ணீர்த்துளியில்
காணாமல் போனது இளமை மட்டுமா...??

இந்தியப் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்பட்ட,
வறுமைப்பேயால் வாழ்விழந்த,
சில விலைமலிந்த ரோஜாக்கள்
ராஜாக்களிடம் புன்னகை பூக்கின்றன...
குடல் பசியைத் தணிக்க,
உடல்பசியின் துணையோடு.

அப்புறமென்ன...
வேளைக்கொரு வண்டு வந்து
விருந்து கேட்டாலும்
விருப்பத்தோடு @#$&^...

பணக்காரன் பஞ்சணையில்
பாவையோடு கொஞ்சும்போது
பாட்டாளி மட்டும்
வறுமை எனும் கொலைவாளின்கீழ்
குடித்தனம் நடத்துவதா?

வாய்பேசாத கற்சிலைகளுக்கு
தங்கக்கூரை வேய்ந்த இந்த மாநிலம் -
வரங்கேட்கும் வறுமைப்பூக்களுக்கு
வாழ்வளித்திருக்கிறதா?

ஏடா பாரதி!
என்னடா சொன்னாய்? -
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழிப்போம் என்றா??

அப்படியெனில் -
எத்தனைமுறை அழித்திருக்க வேண்டும்
இத்தேசத்தை...
அல்ல -
நம் தேசியத்தை !!!


.

2 comments:

நிலாமதி said...

உரத்து சொல்லுங்கள் இனியாவது மக்களுக்கு உறைக்கட்டும். சமுதாய நோக்கத்துக்கு நன்றி பாராட்டுக்கள்.
என் தளம் வ்ந்து நட்பு வட்டத்தில் இணைந்தமைக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

சிசு said...

முதல் வருகைக்கும், முத்தான கருத்துரைக்கும் நன்றி அக்கா...